திருப்பூர், ஆக. 28 –
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ஓய்வூதியம் இலவச பட்டா மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் அக்ரஹார புதூர் பகுதியில் உள்ள சமுதாய நல கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் காலை முதல் உணவு தேநீர் என தடபுடல் விருந்து நடைபெற்றது.
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சார்பில் மங்கலம் பகுதியில் நடைபெறும் அனைத்து உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் உணவு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மங்கலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி, 2500 முட்டைகள் உடன் தடபுடலான விருந்து வைக்கப்பட்டது.
இதில் காலை நேரத்தில் உள்ளே வந்தவர்களுக்கு சுடச்சுட காலை இட்லி, பொங்கல், கிச்சிடி உணவாக வழங்கப்பட்டது. மதிய வேளையில் சாப்பாடு சிக்கன் பிரியாணி,
சிக்கன், வறுவல், அவிச்ச முட்டை என மொரட்டு விருந்து பரிமாறப்பட்டது. மேலும் இடைவிடாது தேநீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று அசைவ விருந்தை விரும்பி சுவைத்தனர்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மத்திய மாவட்டம் திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்க சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி,
திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜுனைத், அக்ரஹரப் புதூர் இளைஞர் அணி பக்கீர் முகமது, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
புத்தூர் சரவணகுமார், திருப்பூர் தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் முகமது உசேன்,
முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஹாருண் மற்றும் இளைஞர் அணி கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அறுசுவை உணவை அருந்தி சென்றனர்.



