விழுப்புரம், ஆகஸ்ட் 04 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 473 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தாட்கோ சார்பில் நன்நிலம் மகளிர் நில உடமைத்திட்டத்தின்கீழ் 04 பயனாளிகளுக்கு ரூ.44.80 இலட்சம் மதிப்பீட்டில் ரூ.19.90 இலட்சம் மானியத்தில் நில உடமைக்கான ஆவணங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்களுக்கு கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 160 டேப்லெட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், தனித்துணை ஆட்சியர் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.