கருங்கல், ஜூலை 31 –
கருங்கல், மத்திகோடு பகுதியில் மூதாட்டி சூசை மரியாள் என்பவர் வீட்டில் புகுந்த போலீசாரால் தள்ளிவிடப்பட்டு இறந்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இதை மறைக்க போலீஸ் தரப்பு முயற்சி செய்வதாக மூதாட்டியின் உறவினர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கருங்கல் வட்டார பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மூதாட்டியின் மருமகள் சந்திரகலா என்பவரிடம் பேசும் ஆடியோ தற்போது சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அந்த பாதிரியார் பேசும் போது: மூதாட்டி உடலை நீங்கள் வாங்காவிட்டால் யாரும் உங்களை தாங்க மாட்டார்கள். போலீசார் உடற்கூறு ஆய்வு செய்து எங்காவது கொண்டு அடக்கம் செய்து விடுவார்கள். நீங்கள் கூறுவது பொய்யோ, சரியோ உங்கள் மகனின் வாழ்க்கையை போலீசார் தீர்த்து விடுவார்கள். நாங்கள் உடல் கூறு ஆய்விற்காக கூட வர தயார். தவறு இருந்தால் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இப்போது நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் உங்கள் மகனின் வாழ்க்கையை போலீசார் அழித்து விடுவார்கள். பின்னர் சில நாள் தாண்டி சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணின் போட்டோவை உங்கள் மகன் பதிவேற்றிய பல வழக்குகளில் சேர்ப்பார்கள். ஏதோ சிறுவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காதீர்கள் என்று அந்த பாதிரியார் கூறுகிறார்.
உடனே மருமகள் குறுக்கிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. யாராவது துக்கம் விசாரித்தீர்களா? இப்போது போலீஸ்காக பரிந்து பேசுகிறீர்களே என்கிறார். உடனே பாதிரியார் ஆத்திரத்தில் செல்போன் இணைப்பை துண்டிக்கிறார். இப்படியாக அந்த உரையாடல் முடிகிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.