நாகர்கோவில், ஜூலை 31 –
கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையான களியக்காவிளையில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் என்பவரை சிலர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், கோட்டாரை சேர்ந்த தவுபீக் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.
பணியின் போது சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சனை கவுரவிக்கும் வகையில் கன்னியாகுமரியில் சமீபத்தில் கட்டப்பட்ட காவலர் தங்கும் விடுதிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை மறைந்த எஸ்எஸ்ஐ வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மறைந்த வில்சனின் உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் வில்சன் உடன் 1966 இல் காவல் பயிற்சி மேற்கொண்ட போலீசார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வந்து எஸ்பி ஸ்டாலினை சந்தித்து வில்சனின் பெயரை குடும்ப நல கட்டிடத்திற்கு வைத்தமைக்கும் நன்றி தெரிவித்தனர்.
அதேபோன்று காவலர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையாக மறைந்த எஸ்எஸ்ஐ வில்சனின் மனைவியை வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைக்க அனுமதித்தமைக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் எஸ்பி யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த கட்டிடம் சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளதால் குறைந்த வாடகையில் காவலர்கள் குடும்பம் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.