தஞ்சாவூர், ஜூலை 30 –
வணிகர்கள் தயக்கம் இன்றி நல வாரியத்தில் சேர வேண்டும் என வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேசினார். தமிழ்நாடு வணிகவரித்துறை வரி ஆலோசகர் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் கட்டணமில்லா சேர்க்கை சிறப்பு முகாம் தஞ்சாவூரில் நடைபெற்றது. வணிகவரி அலுவலர் சரிதா, தஞ்சாவூர் வரி ஆலோசர்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் முகமது ரபி அனைவரையும் வரவேற்றார்.
முகாமிற்கு தஞ்சாவூர் மண்டல வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது: வணிகர் நல வாரியத்தின் மூலம் குடும்ப நல நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுகிறது. இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. வாரியத்தில் பதிவு செய்துள்ள வணிகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றால் நிதி உதவி, தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவி, திருமண உதவித் தொகை, விபத்து கால உதவித் தொகை போன்ற பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.
வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய யாரும் பயப்பட வேண்டாம். உங்களை கண்காணிக்கவோ, உங்கள் வருமானத்தை கண்காணிக்கவோ வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய வலியுறுத்தவில்லை. வணிகர் நல வாரியத்தில் சேருவது உங்கள் நல்லதுக்காக தான். அதனால் எந்த தயக்கமும் இன்றி நல வாரியத்தில் சேருங்கள். அரசின் திட்டங்களை தடையின்றி பெற்று பயன் பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக வணிகவரி உதவி ஆணையர் கீதா நன்றி கூறினார்.