ஈரோடு, ஜூலை 29 –
பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் சேறு சகதி போக 105 அடியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியது இது 32-வது முறையாகும். பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்க ராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானி சாகர் அணை 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.