மயிலாடுதுறை, ஜூலை 28 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் எட்டாம் ஆண்டு பால்குட விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக விக்கிரமன் ஆற்றங்கரையிலிருந்து சக்திகரகம் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு சென்றனர்.