தென்தாமரைகுளம், ஜுலை 28 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐடி பார்க் மற்றும் சிப்காட் ஆகியவை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தென்தாமரைகுளம் பேரூராட்சி பகுதியில் உள்ள காலி இடத்தில் (சாமிதோப்பு உப்பளம் பகுதி) சிப்காட் தொழில் பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று காலை மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அகஸ்தீஸ்வரம் வட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி பகுதியில் உள்ள காலி இடத்தில் (சாமிதோப்பு உப்பளம் பகுதி) புதிதாக அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில் பேட்டைக்கான இடத்தினை புத்தளம் பேரூராட்சி மணவாளபுரம் பகுதியிலுள்ள படகு தளத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு தொழில்பேட்டை அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.0.97 கோடி மதிப்பில் வளமீட்பு பூங்கா செல்லும் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, கலைஞர் நகர்புற மேம்பாடுத்திட்டத்தின்கீழ் ரூ.1.76 கோடி மதிப்பில் மணக்குடி ஏரியிலிருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைபெறும் இடம் வரையில் சிறுபாலம் அமைக்கும் பணி, சிறப்பு நிதியின்கீழ் ரூ.0.70 கோடி மதிப்பில் 12- வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை சாலையில் கருந்தளம் அமைத்தல் என மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பில் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது உடன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என். சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, திமுக நிர்வாகி தாமரை பிரதாப் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.