சோழவந்தான், ஜூலை 22 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முள்ளி பள்ளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதிக்கு செல்ல முள்ளிபள்ளத்தில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய நிலையூர் கால்வாயை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலையூர் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் பொதுமக்கள் மிக ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து வைகை ஆற்றுக்கு செல்லவும் வைகை ஆற்றின் மறுபுறம் உள்ள சோழவந்தான் பகுதிக்கு செல்லவும் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர்.
ஆகையால் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு முள்ளி பள்ளத்தில் உள்ள நிலையூர் கால்வாயில் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் திருவிழா நடைபெறும் காலங்களிலும் வைகை ஆற்றுப்பகுதிக்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் தரைப்பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.