தஞ்சாவூர், ஜூலை 18 –
தஞ்சாவூர் மாநகரில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதில் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க ஏராளமானோர் குவிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த முகாம்கள் 4 கட்டமாக நடைபெறுகிறது. இதில் மொத்தம் 350 முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக நகரப் பகுதியில் 45 இடங்களிலும், ஊரகப்பகுதியில் 75 இடங்களிலும் என மொத்த 120 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முகாமில் நகரப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரக பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளது. இதில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்கு தீர்வு காணப்படும். இந்த முகாமில் இரண்டாவது கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 1,2,3 வார்டுகளுக்கான முகாம் கரந்தை செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை தஞ்சாவூர் எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், மண்டலகுழுத் தலைவர்கள் மேத்தா புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன் கலையரசன், கவுன்சிலர்கள் செந்தமிழ் செல்வன், அய்யப்பன் சுமதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் ஒவ்வொரு திட்டத்திற்கும் விண்ணப்பம் பெற தனித் தனி கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெற தனியாக 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டம் அதிக அளவில் மகளிர் விண்ணப்பம் அளிப்பதற்காக வந்ததால் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன.