தஞ்சாவூர், ஜூலை 15 –
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் 2024-25 ஆண்டு அரசு பொது தேர்வில் 10,12-ம் வகுப்புகளில் 100 சதவீதத்தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
அரசு பொது தேர்வில் 10,12 -ம் வகுப்புகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பிடம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் சில மாதங்களுக்கு முன்பு பாராட்டப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்ற மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி அனைவரையும் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாதவன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதய விழா குழு தலைவர் து. செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரி நிறுவனங்களின் தலைவர் மருது பாண்டியர் சிறப்புரையாற்றினார்.
பின்னர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 தேர்ச்சி பெற்ற 78 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.