தஞ்சாவூர், ஜூலை 11 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட கோவிலில் பெரியநாயகி உடனாகிய பெருவுடையார் எழுந்தருளியுள்ளார்.
கோவிலில் ஆண்டு தோறும் பெருவுடையார் – பெரிய நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷம் உடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம் தாம்பூலம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்க நாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தனர்.
இதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரிய நாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதை, கண்காணிப்பாளர்கள் ரவி, சத்யராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.