தருமபுரி, ஜூலை 11 –
தருமபுரி மாவட்டம் இண்டுர் உள் வட்டம் சோமன அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 77 பயனாளிகளுக்கு ரூ.28.74 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் அரசுத்துறைகளின் சேவைகள், திட்டங்களை குறித்து அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று தகவல் கைடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் நாளில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளித்து பயன் பெற பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் பெறப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உரிய கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், ஆதி திராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.