தஞ்சாவூர், ஜூலை 9 –
போக்குவரத்து போலீசார் பணியின் போது பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் அறிவுறுத்தி உள்ளார். தஞ்சாவூருக்கு கடந்த மாதம் 15, 16 தேதியில் 2 நாட்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். குறிப்பாக தஞ்சாவூரில் நடந்த ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரோடு ஷோ மேற்கொண்டார்.
இதற்காக தஞ்சாவூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் போக்குவரத்து போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையின் போது போக்குவரத்து போலீஸார் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தனது சொந்த நிதியிலிருந்து விலை உயர்ந்த குளிர் கண்ணாடி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில்: போக்குவரத்து போலீசார் வெயில், மழை போன்ற கடுமையான சூழலில் அயராது உழைக்கின்றனர். வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் தூசியிலிருந்து அவர்கள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி வழங்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து போலீசார் பணியின் போது பொது மக்களிடம் கனிவாக பேச வேண்டும்.
தற்போது தஞ்சாவூரில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டது போல் அடுத்த கட்டமாக பட்டுக்கோட்டையிலும் போக்குவரத்து போலீஸாருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், நிழல் குடை இல்லாத பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்குடை அமைத்து தரவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் சோசமசுந்தரம், போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.