நாகர்கோவில், ஜூலை 7 –
குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரகிளையின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர எல்லைக்குள் வசூலிக்கப்படும் வாகன கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் நடக்கும் நடைபாதைகளை சீரமைக்க வேண்டும், ஆண்டாண்டு காலமாக சுகாதார சீர்கேட்டை மாநகராட்சிக்குள் ஏற்படுத்திவரும் வலம்புரி உரக்கிடங்கு மலைமேட்டை உடனே சீரமைக்க வேண்டும், மழைக்காலங்களில் சாக்கடை நிறைந்து மழைநீர் சாலையில் ஆறாக ஓடி சாலைகளை சேதப்படுத்துவதை உடனே தடுத்திட வேண்டும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச ஸ்கேன் வசதி பல மாதங்களாக தடைபட்டுள்ளது. இதனை உடனே சீர்செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் தோழர் கே. நாகராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர பொருளாளர் தோழர் சி. நாகப்பன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத்தலைவர் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட துணைச்செயலாளர் தோழர் ஜி. சுரேஷ் மேசிய தாஸ் ஆகியோர் பேசினர். போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளரும் பூதை பஞ்சாயத்து துணைத்தலைவர் தோழர் எஸ். அனில்குமார் முடித்து வைத்தார். திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகர செயற்குழு உறுப்பினர் சிங் நன்றி கூறினார்.



