கோவை, ஜூலை 04 –
கோவை மாவட்டம் கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற விவசாய கண்காட்சி ஜூலை 10 முதல் 14 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்ரி இன்டெக்ஸ் 2025 தலைவர் ஸ்ரீஹரி கூறுகையில் இந்தக் கண்காட்சி ஐந்து நாட்கள் நடைபெறும். சுமார் 480 கண்காட்சியாளர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சி ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும். விவசாயத்தில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருவதால் கண்காட்சிகளில் ட்ரோன்கள், சூரிய சக்தி பம்புகள், வேளாண் கருவிகளில் ஆட்டோமேஷன் மற்றும் சிறிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற உபகரணங்கள் ஆகியவை அடங்கும். பூர்வீக கால்நடை இனங்களும் காட்சிப்படுத்தப்படும்.
சுமார் 2 லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்க்கும் இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். பொதுமக்களுக்கான நுழைவு கட்டணம் ஒருவருக்கு ரூ.50 இலவச நுழைவுக்கு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
துவக்க விழாவில் தலைமை விருந்தினராக கிருஷ்ணராஜ் வாணவராயர், கவுரவ விருந்தினர்களாக டாக்டர் கே.பி. சிங், டாக்டர் ஆர். தமிழ்வேந்தன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். உடன் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், செயலாளர் யுவராஜ், துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.