திங்கள்சந்தை, ஜூலை 3 –
வில்லுக்குறி பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சில மாதங்களுக்கு முன்பு விளை நிலத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்பட்டது. இதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் பொறி வைத்து செப்டிக் டேங்க் வாகனத்தை சிறை பிடித்த சம்பவம் நடந்திருந்தது. இதனிடையே பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வில்லுக்குறி பாலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உணவு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் எரித்த சம்பவம் நடந்தது.
இதேபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் தெரு நாய்கள் பெருகி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற வேண்டும். தெருக்களில் இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலர் செயல் அலுவலரிடம் மனு கொடுத்து வந்தனர். இது சம்பந்தமான பல வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது. பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இருந்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கீழப்பள்ளம் பகுதியில் தெரு நாய் ஒன்று அந்த வழியாக வந்தவர்களை கடித்து குதறிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கீழப்பள்ளம் பகுதியில் நேற்று காலை ஏராளமான தெருநாய்கள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளன. அவைகளுக்குள் சண்டை ஏற்பட்டு மாறி மாறி கடித்துள்ளன. அப்போது ஒரு தெரு நாய் ஆக்ரோஷமாக வெறி வந்தது போல் அந்த வழியாக சென்ற ஒரு முதியவரை கடித்து குதறியது. அதோடு நிற்காமல் கீழப்பள்ளம் முதல் திருவிடைக்கோடு வரை ஓடி சென்று எதிரே வருவோரையும் போவோரையும் கடித்து குதறியது. பேரூராட்சி சுகாதார பணியாளர் உட்பட 3 பெண்கள், வாரியல் விற்பனை செய்ய அந்த வழியாக நடந்து வந்த வட மாநில இரண்டு தொழிலாளர்கள் உட்பட 4 ஆண்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கால்நடைகளையும் விட்டு வைக்காத வெறிநாய் அங்கு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் கடித்து குதறி உள்ளது. இதில் ஒரு ஆட்டிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்து ரத்தம் சொட்டிய சம்பவமும் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த இளைஞர்கள் தெரு நாயை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அது தப்பி ஒடி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வில்லுக்குறி பேரூராட்சி 3-வது மற்றும் 4-வது வார்டுக்கு உட்பட்ட விவேகானந்தர் சந்திப்பு, அயோத்தியா காரியாலயம், திருவிடைக்கோடு அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், கீழப்பள்ளம் மாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் என பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என செயல் அலுவலருக்கு அப்பகுதி மக்கள் மனு கொடுத்து வருகின்றனர். மனிதர்களையும் கால்நடைகளையும் நாய் கடித்து குதறிய சம்பவத்தால் நேற்று காலை முதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.