மயிலாடுதுறை, ஜூலை 3 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர். அவர்களது செருக்கை அடக்க சிவ பெருமான் மற்றும் விஷ்ணு இணைந்து நடத்திய திருவிளையாடலின் போது சிவனை அழிக்க பல்வேறு மிருகங்களை யாகம் மூலம் தோற்றுவித்து தாருகாவனத்து முனிவர்கள் ஏவினர். இதில் முக்கியமாக யானையை உரித்து சிவபெருமான் நடனமாடி ஆடையாக அணிந்து கொண்டார். அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது.
அந்த முனிவர்கள் வசித்த புகழ்பெற்ற தாருகா வனத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. தாருகா வனத்து சித்தர் பீடம் என்று அழைக்கப்படும் இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நவதானியங்களை வைத்து முளைப்பாரி விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மண் கலயங்களில் நவதானிய விதைகளை தூவி முளைப்பாரி வளர்ப்பதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ரஷ்யா, கஜகஸ்தான், ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நவதானியங்களை தூவி ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்துடன் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.