திண்டுக்கல், ஜூலை 1 –
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர் கிராம ஊராட்சியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்காக சுமார் 4000-த்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆயிரம் பேர் 100 நாள் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 100 நாள் வேலையான குளம் தூர்வாருதல், வரத்து வாய்க்கால் வேலை செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டு தற்போது தோட்டங்களில் 100 நாள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சியில் மக்கள் நல பணியாளரான காளீஸ்வரி என்பவர் மட்டும் உள்ளார். ஆனால் பணிதல பொறுப்பாளர்கள் என கூறி 4 பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து 100 நாள் வேலைக்கு வராத ஆட்களின் அட்டையைப் பயன்படுத்தி அவர்கள் வேலை செய்வதாக பதிவு செய்து அவர்களின் சம்பளங்களை அவர்களது வங்கி கணக்கில் அனுப்பி அதில் பாதி தொகையை பணிதல பொறுப்பாளர்கள் பெற்றுக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
இது போன்று ஆத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலையில் தினமும் வேலைக்கு வராத 150க்கும் மேற்பட்டவர்களை பதிவு செய்து மெகா முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆத்தூர் ஊராட்சி, அக்ரகார தெரு, புத்தூர் கோவில் தெரு, பத்திர ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. 100 நாள் வேலையில் ஆத்தூர் ஊராட்சியில் மிகப்பெரிய முறையீடு ஊழல் நடந்து உள்ளதாக கூறி அலுவலகத்தில் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அவர்களுடன் ஆத்தூர் ஊராட்சி மன்ற செயலர் மணவாளன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது அலுவலகத்தில் பணிதல பொறுப்பாளராக உள்ள 4 பெண்களை மாற்ற வேண்டும். மக்கள் நலப் பணியாளர் தலைமையில்தான் 100 வேலை நடைபெற வேண்டும். எங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.