கருங்கல், ஜூன் 30 –
கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் ஒரு குளத்தின் கரையில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு 6 பேர் ஒன்றாக அமர்ந்து இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டு உடனே அவர்களை பிடிப்பதற்கு போலீசார் சென்றனர். போலீசை கண்டதும் அந்த கும்பலில் உள்ள அனைவரும் தலை தெறிக்க ஓடினார்கள்.
இதையடுத்து போலீசார் துரத்தி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் அங்கிருந்த ஐந்து கட்டு சீட்டுகள், ரூ. 38 ஆயிரத்து 140 ரொக்க பணம், 3 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கருங்கல் காவல் நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் கைதானவர்கள் கோடி முனை ஆரோக்கிய ஜெயராஜ் (45), வட்ட விளை அருள் (53), அஞ்சு குழி ஜான் ஜார்லிங் (37) என்பது தெரிய வந்தது. இதில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பலரிடம் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் சேருகின்றனர் எனவும் மிகப்பெரிய நெட்வொர்க் உருவாக்கி வெளியூரில் இருந்தும் இந்த பகுதிக்கு வந்து பெருமளவில் பணத்தை வைத்து சூதாடி வருவதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தற்போது சீக்கிய 3 பேரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.