உசிலம்பட்டி, ஜூன் 28 –
மதுரை, உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணியை திடீரென நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி அருகே நாட்டாபட்டி கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நெல் சாகுபடி செய்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யப்பட்ட சூழலில் கடந்த 10 தினங்களாக நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்து விட்டதாகவும், கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகளை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து காத்திருப்பதாகவும், உரிய பாதுகாப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள நெல் மணிகள் மழை வந்தால் சேதமடையும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நெல் மணிகளை தனியாருக்கு விற்பனை செய்தாலும் குறைந்த விலைக்கு கேட்பதாகவும், அரசு கொள்முதல் நிலையத்தில் மீண்டும் கொள்முதல் பணியை துவங்கி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வாலாந்தூர் காவல் நிலைய போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.