தூத்துக்குடி, ஜூன் 26 –
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். முன்னதாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேரகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்றி பணியிடைக் காலமான சத்துணவு பணியாளரின் வாரிசுதாரரான சு.செல்வராணி என்பவருக்கு கருணை அடிப்படையில் அமைப்பாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.