நாகர்கோவில் ஜூன் 2
குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடம் யாசகம் பெற்றும், ஊக்கு (சேப்டி பின்) விற்பனை செய்தும்
சுற்றித் திரியும் குழந்தைகள். கையில் கிடைக்கும் சொற்ப பைசாவை வைத்து அருகில் உள்ள டீக்கடையில் டீ வாங்கி நடைபாதையில் அமர்ந்து கொண்டு பரிதாமாக தேநீர் அருந்தும் இரண்டு சிறுவர்கள் யார் ? இவர்களின் பெற்றோர் யார் ? இவர்களை இப்படி நடுரோட்டில் சிறுவயதில் வியாபாரம் , மற்றும் யாசகம் எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் சமூக விரோத கும்பல் யார்?
மாவட்ட சமூக நல அதிகாரிகள் கண்களில் மற்றும் அரசின் நிதி உதவியுடன் இயங்கி வரும் பல தொண்டு நிறுவனங்களின் கண்களில் இப்படி சுற்றித் திரியும் சிறுவர்கள் அகப்படவில்லையா? ஒவ்வொரு பெற்றோரும் பள்ளி திரப்பினை முன்னிட்டு தங்கள் குழந்தைகளின் எதிர் காலம் கருதி அவர்களை படிக்க வைப்பதற்காக வேண்டி லட்ச, லட்சமாக பணங்களை செலவு செய்து பள்ளி சேர்க்கைக்கு ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கி படாதபாடுபட்டு பின் கடை, கடையாய் அலைந்து திரிந்து நோட், புக் , யுனிஃப்பார்ம் என்று பார்த்து பார்த்து வாங்கி கொடுத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மன நிறைவு அடையும் வேளையில் இது போன்ற குழந்தைகள் யாசகம் பெற்றும், சில பொருட்களை விற்பனை செய்தும் சீரழிந்து வருகின்றனர். பெற்றால் தான் பிள்ளையா? கல்வி அறிவு பெற்ற மாவட்டம் என்று
மார்தட்டிக்கொண்டு மயக்க நிலையில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் கல்வி கற்க முடியாதபடி
ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், அனாதையாக இருப்பவர்கள், தாய் தகப்பனை இழந்த பிள்ளைகள் , சாலை ஓரங்களில் சுற்றித் திரிந்து யாசகம் பெறும் சிறு குழந்தைகள் ஆகியோரை கண்டறிந்து அவர்களின் கல்லாமையை போக்கி கல்வி அறிவு எனும் ஒளியை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க ஏன் முன் வரவில்லை.
கல்வி அறிவை கொடுப்பதற்காக அரசால் வழங்கப்படும் நிதி செலவழிக்கப்படுகிறதா ? இல்லை கையாடல் செய்யப்படுகிறதா ?
செலவழிக்கப்படுகிறது என்றால்
சாலை ஓரங்களில் குழந்தைகள் சுற்றி திரிய மாட்டார்கள். இதுபோன்ற
குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட சமூக நல துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என யோசித்துப் பார்த்தால் சமூக நலத்துறையில் பணியாற்றுபவர்கள் சமூக நல அக்கறையுடன் வெளியில் சென்று வேலை பார்ப்பது இல்லை என தெரிய வருகிறது. தொலைபேசி அழைப்பு மூலம் வரும் புகார்களை மட்டும் பார்த்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்து மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு நிம்மதியாக இருந்து வருகின்றனர்.
இந்த சிறுவர்கள் சிறுவயதில் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, கால்களில் செருப்பு கூட அணியாமல் பிஞ்சு கால்களில் மழை, வெயில் காலங்களில் சாலையில் அங்கும், இங்குமாக வாகனங்கள் வருவதை கூட கவனிக்காமல் விபத்தை உணராமல் அலைந்து திரிந்து வியாபாரம் செய்து பிழைப்பது நியாமா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் , எனவே மாவட்ட சமூக நல துறையினர் மாவட்டத்தில் இது போன்ற சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது போன்று
செயல்படாமல் அலுவலகத்திலேயே இருந்து பணி செய்து வரும் சமூக நலத்துறை ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வாரா ? எதிர்பார்ப்புகளுடன் சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.