முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு குழித்துறை பகுதியில் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை, பைக் பேராணி போன்றவை நடந்தது. நிகழ்ச்சிக்கு தாரகை கத்பட் எம்எல்ஏ தலைமை தாங்கினார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு ரத யாத்திரை மற்றும் பைக் பேரணியை தொடங்கி வைத்தார்.
பளுகல் சந்திப்பில் இருந்து தொடங்கிய ரத யாத்திரை முன்னே செல்ல பின்னால் பைக் பேரணி சென்றது. கண்ணுமாமூடு, புத்தன்சந்தை, கழுவன் திட்டை வழியாக குழித்துறை சந்திப்பை வந்தடைந்தது. பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல் குழித்துறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினர். இதை அடுத்து தேசிய தீவிரவாத தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த பேரணிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் காவல்துறை அனுமதி இல்லாமல் பைக் பேரணி நடத்தப்பட்டது. இதை அடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக சப் இன்ஸ்பெக்டர் இந்து சூடன் புகாரின் பேரில் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், தாரகை கத்பட் , காங்கிரஸ் மாவட்ட தலைவர் பினுலால் சிங் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குழித்துறை ராஜீவ் நினைவு தினம்:காங்கிரஸ் ரத யாத்திரை, பைக் பேரணி2 எம்எல்ஏக்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவு

Leave a comment