நாகர்கோவில் மே 6:
நாகர்கோவில் கோட்டார் கன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். (51) பெயிண்டர். இவருக்கு வேணி சகிலா (42) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக வெங்கடேசன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பறக்க விளக்கு பகுதியில் சவப்பெட்டி செய்யும் கடை அருகே வெங்கடேசன் மயக்க நிலையில் கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது இதை எடுத்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மயக்க நிலையில் கிடந்தது வெங்கடேசன் தான் என்பது உறுதியானது.
இதை எடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் வெங்கடேசன் இறந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோட்டாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே மது குடித்து அதனால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசன் இறந்து கிடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


