நாகர்கோவில் ஏப் 6
கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தனி தீர்மானம் எனும் திமுகவின் கபட நாடகத்தை அம்பலப்படுத்துவோம்.என நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கூறி வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுவாகவே தமிழ்நாட்டில் வாக்கு அரசியல் சூழலில் சில பிரச்சனைகளை எப்போதும் தீர்க்காமல் உயிர்ப்போடே வைத்துக் கொண்டிருப்பது இரண்டு திராவிட கட்சிகளின் வியூகமாக இருந்து வருகிறது.
அதில் முக்கியமான ஒன்று கச்சத்தீவு மீட்பு.
தமிழ்நாட்டில் திமுகவும், ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களின் எவ்வித ஒப்புதலும் பெறாமல் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கச்சத்தீவு எனும் நம் நிலம் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.
அன்றைய சூழலில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த திரு கருணாநிதி அவர்கள் திருமதி இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு, நிபந்தனையற்ற விசுவாசியாக இருந்த காரணத்தால் எவ்வித வலிமையான எதிர்வினைகளும் தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்த இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கச்சத்தீவு தாரை வார்ப்பிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பில்லாத நிலைப்பாட்டுடன் தான் இருந்தனர். இன்று வரையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, கட்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது சரியான செயல்தான் என்ற நிலைப்பாட்டுடன் தான் இருந்து வருகிறது.
இந்த வரலாறு தமிழ்நாட்டில் இத்தனை நாள் அரசியல் செய்து கொண்டிருக்கும் பல கட்சிகளின் தமிழர் விரோத நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு முறை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் கொல்லப்படும் போதும், தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், விரட்டி அடிக்கப்படும் போதும் கச்சத்தீவை மீட்பது தான் ஒரே நிரந்தர தீர்வு என தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் தேவைகளுக்காகவும், தேர்தல் நேர விளம்பரத்திற்காகவும் மட்டும் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுப்பது மிகவும் மோசமான அரசியலாகும்.
இந்த மோசமான அரசியலை கடந்த காலங்களில் அதிமுகவும் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவும் செய்திருக்கின்றனர். அவ்வகையில் வரும் 2026 தேர்தலை முன்னிட்டு திமுக மீண்டும் கச்சத்தீவு அரசியலை கையில் எடுத்திருக்கிறது.
உண்மையிலேயே கச்சத்தீவை மீட்பது திமுகவின் நோக்கமாக இருந்திருந்தால் கடந்த காலங்களில் சுமார் 16 வருடங்கள் ஒன்றியத்தில் காங்கிரஸ் உடனும், பல ஆண்டுகள் பாஜக, ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏன் கச்சத்தீவு மீட்பு பற்றி எவ்விதமான கோரிக்கையும் வைக்கவில்லை?
காங்கிரஸ் உடனான கூட்டணி ஆட்சியில் மிகவும் வலிமையாகவும், பல்வேறு முக்கியமான துறைகளில் அமைச்சரவை பொறுப்புகளையும் பெற்று ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றிருந்தபோது திமுக கட்சத்தீவு மீட்புக்காக செய்த முன்நகர்வுகள் என்ன?
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலைப்பாடு என்ன?
திமுக சார்பில் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இந்த தீர்மானத்தை தமிழ்நாடு பாஜக சார்பில் ஆதரித்திருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன். ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக, கச்சத்தீவை மீட்க ஏதேனும் முயற்சிகளையோ பேச்சுவார்த்தைகளையோ நடத்தி இருக்கிறதா?
இந்த கேள்விகளை இந்த தருணத்தில் எழுப்ப வேண்டியிருக்கிறது.
கச்சத்தீவு மீட்பு என்பது உங்கள் அரசியல் விளையாட்டு அல்ல. அது தமிழர்களின் உரிமை. தமிழ்நாட்டின் இறையாண்மை.
கச்சத்தீவை தாரை வார்த்த இந்திரா காந்தி -சிறிமாவோ பண்டாரநாயகே முன்னிலையில் கையெழுத்தான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அதற்காக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை சார்பாக இலங்கையுடன் சர்வதேச விதிகளின்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நமது நிலமும் கடல் எல்லையும் திரும்பப்பெறப்பட வேண்டும்.
இதற்கான அனைத்து அரசியல் அழுத்தங்களையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கொடுக்க வேண்டும். மாறாக தேர்தல் நேரங்களில் மட்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, மேடைகளில் பேசிவிட்டு, தேர்தல் வாக்குறுதியில் சேர்த்துவிட்டு, மறுபடியும் வழக்கம்போல அடுத்த ஐந்து ஆண்டுகள் கைகட்டி வாய்பொத்தி கண்மூடி இருப்பது அல்ல ஒரு அரசின் வேலை.
தமிழ்தேசிய அரசியலை தமிழ்நாடு அரசியல் தளத்தில் வலிமையாக முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கச்சத்தீவு மீட்பு பற்றி குரலெழுப்பி வருகிறோம். அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
தேர்தல் வாக்குறுதியாக இல்லாமல் ஆட்சி வரைவறிக்கையிலேயே கச்சத்தீவு மீட்பை கனவாக கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி. சில நாட்களுக்கு முன்பு கூட ராமேஸ்வரத்தில் அண்ணன் சீமான் தலைமையில் கச்சத்தீவு மீட்புக்கான மாபெரும் போராட்டமும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
நாங்கள் இதை தொடர்ந்து செய்வோம்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெறும் தேர்தல் அரசியலாக பார்க்கும் கச்சத்தீவை, நாங்கள் எங்கள் உணர்வாகவும் உரிமையாகவும் பார்க்கிறோம்.
கச்சத்தீவு எங்களுக்கு அது அரசியல் அல்ல. அவசியம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.