மதுரை மார்ச் 22,
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
கோடை வசந்த உற்சவ விழா
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1434-ம் பசலி,கோடை வசந்த உற்சவ விழா 02.04.2025-ம் தேதி முதல் 10.04.2025-ம் தேதி முடியவும், பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு 11.04.2025-ந் தேதியன்றும் நடைபெறவுள்ளது.
11.04.2025-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை 10.00 மணிக்கு மேல் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செல்லூர், வைகை வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்தும் பின் மாலையில் அருள்மிகு சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், அருள்மிகு மீனாட்சியம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளிய பின் திருக்கோயிலுக்கு வந்து, அதன் பின்னர் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை முடிந்து சேத்தியாவார்கள். எனவே, மேற்படி உற்சவ நாட்களான 02.04.2025 முதல் 11.04.2025 தேதி வரையிலும் திருக்கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் பதிவு செய்து நடத்திட இயலாது என்ற விபரத்தினையும் இத்திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றார்கள். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இத்திருக்கோயில் அறங்காவலர்கள், இணை ஆணையர் / செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.