வத்தலகுண்டு அடுத்த, கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே, பாலம் கட்டும் பணிக்காக வெடி வைப்பதால், முன்னாள் முதல்வர் காமராஜர் அஸ்தி கரைத்த வைகை ஆற்று கரையில் அமைந்துள்ள, மும்மதம் வழிபாடு தளமான, கோடி முத்தி விநாயகர் கோயில் இடிந்து சேதமடைந்ததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, கண்ணாபட்டி அருகே, கூட்டாத்து அய்யம்பாளையம் உள்ளது. இங்கு சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்மத வழிபாடுகள் செய்யப்படும் கோடி முத்தி விநாயகர் கோவில் உள்ளது.
வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை, பாலாறு உள்ளிட்ட 13 ஆறுகள் சங்கமிக்கும் இடமான கூட்டாத்து அய்யம்பாளையம் உள்ளது. இங்குள்ள கோடி முத்தி விநாயகர் கோவிலில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் வழிபாடு தளமாகவும், இறந்தவர்களின் அஸ்தி கறைக்கும் ஈமகிரியை செய்யும் இடமாகவும் கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதி சிறந்து விளங்கி வருகிறது.
இந்த பகுதியில் முருகன் பாதயாத்திரை பக்தர்கள் தங்குமிடமாகவும், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் இந்து, கிறிஸ்டீன், முஸ்லிம் உள்ளிட்ட மும்மதம் மக்கள் வழிபாடும் கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு மூன்று மதங்களை அடையாளம் படுத்தும் விதமாக முன்பகுதி இந்து கோயிலாகவும், நடுப்பகுதி கிறிஸ்தவர்கள் ஆலயமாகவும், பின்பகுதி முஸ்லிமும் தொழுகும் மசூதியாகவும் காணப்பட்டு வருகிறது. இந்த கோவிலை கட்டிய ஸ்ரீராஜயோக சிவப்பிரகாஷ் சுவாமிகள் கடந்த, 1975-ஆம் ஆண்டு இங்கு ஜீவ சமாதி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளன்று வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 1954-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவில் திருவிழாவில் கண்ணாம்பட்டி, செக்கபட்டி, விருவீடு, குளிப்பட்டி, உச்சப்பட்டி, விராலிப்பட்டி மீனான்கன்னிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கண்ணாபட்டியில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலை கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே, கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 4 கோடியை 27 லட்சத்து, 57 ஆயிரம் மதிப்பில் பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் கட்டும் பணியின் போது, அந்த பகுதியில் பாறைகள் இருப்பதால், ரிக்கிங் மூலம் தொலை அமைத்து பில்லர் எழுப்பி பாலம் கட்டாமல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வெடி வைத்து பாறைகளை உடைத்து, பாலம் கட்டி வருகின்றனர். இந்த பயங்கர வெடி சத்தத்தின் அதிர்வுகளாலும், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் பெய்த மழையினாலும் இக்கோவில் முழுமையாக இடிந்து உடைந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், பாலம் கட்டும் பணியின்போது வெடி வைத்ததால், பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. வெடி வெடிப்பதால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், இருதய நோயாளிகள், குழந்தைகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கோவில் பக்தர்கள் பாலம் கட்டும் பணியின் போது இடிந்து விழுந்து சேதமடைந்த கோவிலை, தமிழ்நாடு அரசு கட்டிக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.