நீலகிரி. மார். 10.
மலை மாவட்டமான நீலகிரியில் சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு எதிரான நிகழ்வுகள் அரங்கேறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் கோத்தகிரி அருகே உள்ள டானிங்டன் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிகளை பெறாமல் பாறைகளை உடைத்து வருவதாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் ராட்சத பாறைகள் அனுமதி இன்றி உடைக்கும் பணி நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் இது போன்ற பணிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் உடனடியாக பாறைகள் உடைப்பை தடுத்து நிறுத்தியதோடு பாறைகள் வெடி மருந்து பயன்படுத்தி உடைக்கப்பட்டதா அல்லது கனரக எந்திரங்களை பயன்படுத்தி உடைக்கப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் உள்ள சிலர் தனியார் நிலங்களை விலைக்கு வாங்கி அந்த பகுதியில் வீடு கட்டுவதாக அரசிடம் இருந்து அனுமதி வாங்கி விதிமுறைகளை மீறி கனரக வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்து இதுபோன்ற சம்பவங்களை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் பற்றி கோத்தகிரி வட்டாட்சியரிடம் கேட்ட பொழுது யாருக்கும் பாறைகளை வெடிவைத்து தகர்க்கவோ உடைக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.