நாகர்கோவில் மே 22
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, திருமேனி காக்குமூர் அருள்மிகு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழா மற்றும் ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு விழா நடைபெற்றது. இத்திருக்கோவில் கொடைவிழா 20-05-2024 முதல் 22-05-2024 இன்று வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம், காக்குமூரில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக ரூ. 35 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சாஸ்தா மஹாலில் (திருமண மண்டபம்) குத்துவிளக்கு ஏற்றி, பால் காய்ச்சும் வைபவத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழாவை முன்னிட்டு இத்திருக்கோவிலுக்க சென்று அம்மனை வழிபட்டார். பின்னர் அங்குள்ள பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேசும் போது தெரிவித்ததாவது,
இப்பகுதியின் வளர்ச்சிக்காக, இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதன் வாயிலாக இப்பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து தங்களது நிதி பங்களிப்புடன் அழகான திருமண மண்டபத்தை கட்டி எழுப்பியுள்ளார்கள். இதன் வாயிலாக சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திருமண மண்டபங்களை தேடி வெளி இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கேயே தற்போது திருமண மண்டபம் வந்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு திருமணங்கள், பிறந்தநாள் போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளை இம்மண்டபத்தில் நடத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியின்படி இத்திருமண மண்டபத்திற்கு எனது சார்பில் 200 இருக்கைகள் விரைவில் வழங்கப்படும். இம்மண்டபம் வருவதற்கு காரணமாக இருந்த ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.
இவ்விழாவில் கொடைவிழாக்குழு மற்றும் ஊர்த்தலைவர் சிவன்பிள்ளை, துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் பகவதி பெருமாள், துணைச் செயலாளர் கே.கோபால், பொருளாளர் சுப்பிரமணியபிள்ளை, துணைப் பொருளாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சிவதாணுபிள்ளை, சண்முகம்பிள்ளை, பத்மநாபன், சிவசுப்பிரமணியம், மது, வேலாயுதபெருமாள், முத்துசிவம், விக்னேஷ், அருண், பிரபாகரன், திருக்கோயில் பூஜாரி குமாரசுவாமிபிள்ளை மற்றும் கழக நிர்வாகிகள் தாமரை தினேஷ், சுகுமாரன், வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ராஜாராம், குமார், குமரகுரு, ஆ.கே.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.