தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மணி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சதீஷ் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் அன்பழகன், வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விளக்கிப் பேசினார்கள். கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மணி கூறியதாவது. தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் . தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை மூலம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதை கண் காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அரசியல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்குரிய தீர்வை கண்டறிந்து நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். துறை அலுவலர்கள் மத்திய, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றியிட உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி தலைவர் லட்சுமி, கூடுதல் கலெக்டர்கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள், நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



