தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேத்து ரெட்டிப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சவுளுக் கொட்டாய் ரயில்வே பாலம் முதல் வேப்பிலைப்பட்டி இடுகாடு வரை ரூ.10.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டார். கால்வாய் அமைக்கும் பணியில் உறிய அளவீடுகளை குறித்து காட்டி அதன் அடிப்படையில் துல்லியமாகவும், சீராகவும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். பின்னர் ரூ.9.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒன்றிய நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை குறித்த காலத்திற்குள் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். தெரு விளக்கு, கழிப்பிடம், கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றித்தர அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை அளவுகள் சரியாக உள்ளதா ? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், கலைச்செல்வி, உதவி பொறியாளர் சாந்தி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



