நாகர்கோவில் பிப் 12
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு கல்வெட்டு சேதமடைந்ததற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வேதனையை வெளிப்படுத்தி, உடைந்த கல்வெட்டினை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அரசினை கேட்டுக்கொண்டுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பாசனத்திற்கு எனவும் விவசாயிகளின் நலன் காக்கவும் பல்வேறு பாசன திட்டங்களை கொண்டு வந்தார். அதில் மிகவும் நுணுக்கத்துடன் கட்டப்பட்டது தான் உலகே வியந்து பார்க்கும் மாத்தூர் தொட்டி பாலம். ஆசியாவிலேயே மிக உயரமான நீளமான பாசன கால்வாய் பாலம் இது தான். இதில் பெருந்தலைவர் பெயரில் நினைவு கல்வெட்டு ஒன்று அவரின் புகழை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது. நேற்றிரவு பெருந்தலைவரின் உருவப்படம் பொருத்திய கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்து வேதனை அடைந்தோம்.
இது குறித்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். ஓரிரு தினங்களில் அந்த கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியினை விரைவில் மேற்கொண்டு முடித்து ஐயா காமராஜரின் பெயரை மீண்டும் அங்கு நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் இத்தகைய செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு போதிய பாதுகாப்பு வசதிகளை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.