கருங்கல், பிப்- 12
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் எம் எல் ஏ வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜரின் படத்துடன் கூடிய கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
உடைத்த பாகங்கள் முழுவதையும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் இணைந்து அவசர அவசரமாக அகற்றி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
இன்று கல்வெட்டை உடைத்த சமூக விரோத சக்திகள் நாளை பாலத்தையே உடைக்க மாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசும் காவல்துறையும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பெருந்தலைவர் படத்துடன் கூடிய கல்வெட்டை உடைத்த சமூக விரோத சக்திகளை கைது செய்வதோடு இனி வரும் காலங்களில் இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சமூக விரோதிகள் கைது செய்யப் படுவதில் மெத்தனமாக காவால் துறை செயல்படுமேயானால் மிகப்பெரிய போராட்டத்தினை சந்திக்க நேரிடும் என சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் எச்சரிக்கின்றேன்.
தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டி பாலம், திருவெட்டார் நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில், மாத்தூர் என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில், வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலம் கட்டப்பட்டது. பரளியாற்று தண்ணீரை விவசாயத்துக்கு எடு்த்துச் செல்ல எந்த வழியும் இல்லை என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கையை விரித்து விட்ட நிலையில், படிக்காத மேதை காமராஜர் அந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு, இரு மலைகளுக்கு இடையே பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார். அன்றைய கால கட்டத்தில் வெறும் 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே ஆசியாவிலேயே மிகப்பெரிய
இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும் .
இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் கட்டப்பட்டது.
அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.
கர்ம வீரர் எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் கொண்டது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த பாலத்தை கட்டிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கல்வெட்டை உடனடியாக அதே இடத்தில் அமைப்பதுடன் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைத்து அதில் பாலத்தின் சிறப்புக்கள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய கண்காட்சி கூடம் அமைப்பதோடு மாத்துர் தொட்டிப்பாலத்தை இந்தியாவிலே சிறந்த சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களையும் தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.