மதுரை பிப்ரவரி 7,
மதுரை அழகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் புறப்பாடு
மதுரை அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா தனிப்பெருமையுடையது. இந்த விழாவானது மங்கள இசையுடன் மூலவர் சன்னதி முன்புள்ள தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் மயில், வேல், சேவல் உள்ளிட்ட ஆன்மிக அடையாளக் கொடிகள் ஏற்றப்பட்டன. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேதசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தகவிநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் விசேஷப் பூஜைகள், யாகசாலையில் யாகம் வளர்க்கப்பட்டு தீபாராதனைகளும் பின்னர் சோலைமலை முருகன், வள்ளி தெய்வானை ஆகியோருக்கு மஹா தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் மேளதாளம் முழங்க சோலைமலை முருகப்பெருமான் தனது துணைவியார்கள் வள்ளி தெய்வானையுடன் சாமி புறப்பாடு நடைபெற்றது.