தேனி,ஜன.30 –
தேனி மாவட்டம்
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் (திருத்தச் சட்டம்), 2002-ன் படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொது பயன்பாட்டு சேவைகள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய பிரச்சனைகள் (Pre-litigation) நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த சட்டத்தின் படி விமானம், சாலை அல்லது நீர்வழிப் பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை, எந்தவொரு நிறுவனத்தினாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை, பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை, காப்பீட்டு சேவைகள், கல்வி நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை. மேலும் மத்திய மாநில அரசின் அறிவிப்பின் மூலம் அவ்வப்போது சேர்க்கப்படும் மற்ற சேவைகள் தொடர்பாகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்.
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது மிகவும் எளிமையானது. பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்குகளை, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர்/மாவட்ட நீதிபதி முன் சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி தாக்கல் செய்யலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பண ஆள்வரை ரூ.1 கோடி ஆகும்.
இதனடிப்படையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ள இயலாமல் இருந்த விவசாய நிலத்திற்கு மாண்புமிகு தலைவர்/ மாவட்டநீதிபதி, திருமதி ஏ.கே.கே.ரஜினி., பி.எல்., அவர்களால் இருதரப்பினரிடையேயும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அந்த விவசாயநிலத்திற்கு மின் இணைப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே, பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் நிரந்த மக்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகி பயனடையலாம் என மாண்புமிகு தலைவர்/ மாவட்டநீதிபதி, திருமதி ஏ.கே.கே.ரஜினி., பி.எல்., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.