நாகர்கோவில் – ஜன – 30,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவித்த கூலி 730/- ரூபாய் கேட்டும் இதுவரையிலும், இஎஸ்ஐ , பி எப் , பிடித்த ரசீதுகளும், கார்டுகளும் தரக்கேட்டு கடந்த
27.01.2025-ம் தேதியன்று கோரிக்கைகளை வலியுறுத்தி குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று ஏ ஐசிசிடியு கன்னியாகுமரி மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர் . அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த பணியில் 46 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பணி செய்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் தூய்மை பணியாளர்களுக்கு தினம் 730/- ரூபாய் கூலியும், தூய்மை பணி ஓட்டுநர்களுக்கு தினம் 780/ ரூபாய் கூலியும் நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், குளச்சல் நகராட்சியில் தினக்கூலியாக 400/- ரூபாய் மட்டுமே கிடைத்து வருகிறது. அரசு அறிவித்த கூலியை கேட்டால், வேலையை விட்டு போங்கல் என்று மிரட்டுகிறார்கள். வேலை போய்விடுமோ என்ற பயத்தில் தொழிலாளர்கள் இந்த அடிமாட்டு கூலி 400/- ரூபாய்க்கு பணி செய்து வருவதாகவும்,
தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயப்படி பிஎப் மற்றும் இஎஸ்ஐ அரசு விதிகளுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையினை செலுத்த வேண்டும். பல மாதங்களாக பிஎப், இஎஸ்ஐ பிடித்ததற்கான ரசீது மற்றும் கார்டுகளையும் கேட்ட போது தொழிலாளர்களிடம் நிர்வாகம் எச்சரித்து முறைத்து பார்ப்பதாகவும் இஎஸ்ஐ , பி எப் ரசீது கேட்பதோ, கார்டுகள் கேட்பதோ, குற்றவாளிகளை போல் பார்க்கிறார்கள். இது தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்த தினக்கூலி 730/ ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்த ரசீதுகள் கார்டுகள் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு கை உறைகள் இல்லாமலே பணி செய்து வருவதாகவும் தேவையான காலணிகள் இல்லை. மேலும் மழை பெய்யும் போது மழைக் கோட்டு வழங்குவதில்லை. குளச்சல் நகராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் அனைத்தையும் வழங்கிடுமாறு எ ஐசிசி டியூ கன்னியாகுமரி மாவட்ட தூய்மை பணியாளர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.