தருமபுரி, மே.11-
தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி பார்வையிட்டார்.
பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி தகவல்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று (11.05.2024) நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ ஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி தெரிவித்ததாவது:
தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை. காவல் துறை. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்குத் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 147 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 1146 பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று முதல் 11.05.2024 வரை நடைபெறவுள்ளது. இன்றைய தினம் பள்ளி வாகன ஆய்வின்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 420 வாகனங்களில் 11 வாகனங்கள் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக் கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி கேமிரா, அவசரகால வழி, பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும்.
மேற்கண்ட அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின் சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று இரத்து செய்யப்படும். அதேபோன்று, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் நடத்தப்படுவதுடன் வாகன ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பாக சாலை விபத்து தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். இருந்தாலும், பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலை விபத்துகளை தடுக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடந்த ஆண்டு வாகனத்தை இயக்கியது போல இந்த வருடமும் நல்லபடியாகவும், மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் பேருந்துகளை இயக்கி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும். தங்களுடைய ஆரோக்கியத்தையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, துனைப்போக்குவரத்து ஆணையர் (சேலம்) திரு.கே.எம் பிரபாகரன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவராமன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.அ.க.தரணீதர், திரு.G.வெங்கிடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.