மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. நகரப் பேருந்துகளை நிறுத்துவதற்கு ரூ. 55 கோடியில் பேருந்து நிலையமும், அருகில் ரூ. 111. 56 கோடியில் வணிக வளாகமும் என இரு நிலைகளில் பணிகள் தொடங்கி நடைபெற்றன. 58 பேருந்துகள் வரை நிறுத்தும் வகையிலும், இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ரூ. 111. 56 கோடியில் அமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் 474 விற்பனைக் கடைகள் கட்டப்பட்டன. மேலும், சிறுவர்கள் பூங்கா, கட்டப்பட்டன. மேலும், சிறுவர்கள் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகளின் காத்திருப்புக் கூடம், குழந்தைகள் உணவருந்தும் அறை, மருந்தகம், அஞ்சல் அலுவலகம், மின் அறைகள், விசாரணை அறை, உணவகம், நவீன வசதிகளுடன் கூடிய பொதுக் கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இருப்பினும், பணிகள் நிறைவு பெறாதததால், ஒருங்கிணைந்த வணிக வளாகம் இதுவரை திறக்கப்படவில்லை. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



