சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் முக்கிய சாலைகளிலும் பழையூர் பகுதியில் நீர் நிலைகளை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த ஒன்றாம் தேதி பேரூராட்சியின் சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திருப்புவனம் வட்டாட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக சென்றனர். இங்கு அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாத வகையில் திருப்புவனம் காவல் ஆய்வாளர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்ட பொது அங்கு இருந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பிறகு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அதிகாரிகள் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என்று உறுதி அளித்தனர் பின்பு அங்கு ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடமிருந்து நாங்கள் விரைவில் காலி செய்கிறோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு கடை நடத்தி வருபவர்களுக்கு நான்கு நாட்களும் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு ஒரு மாத காலமும் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.



