நாகர்கோவில் அக் 14
குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பின்
செயற்குழு கூட்டம் நாகர்கோவில் பார்வதிபுரதில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் அருட்திரு ஞான தாசன் தலைமை தாங்கினார். பொருளாளர்
பேராயர் டாக்டர் மரியராஜ், முன்னிலை வகித்தார்.
இதில் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், வட்டார தலைவர்கள், மாவட்ட குழு நிர்வாகிகள், வட்டாரக் குழு நிர்வாகிகள், உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மீரான் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமாகிய தளவாய் சுந்தரம் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ள நிகழ்வு சிறுபான்மை மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சித் தலைமை சிறுபான்மை மக்களின் உணர்வுகளை உடனடியாகவும் புரிந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையின் காரணத்தால், தளவாய் சுந்தரம் வகித்து வந்துள்ள கட்சியின் பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் அதிரடியாகவும் விடுவிக்கப்பட்டும், இடைநீக்கம் செய்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கட்சித் தலைமையின் இராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு எமது கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மான நகல் எடப்பாடி கே .பழனிசாமிக்கு அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.