சென்னை, செப்டம்பர் – 04.
சென்னையில் மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி , 122வது நிறுவனர் தினத்தைக் கொண்டாடும் தருணத்தில் வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதை இலக்காகக் கொண்டு கல்லூரியைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடித் தங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் முகமாகவும் ஆங்கில இலக்கியத்தைப் போற்றுமுகமாகவும் 15 நிமிடங்களில் தேர்வு செய்யப்பட்ட ஆங்கிலக் கவிதைகளைக் குழுவாக அரங்கேற்றித் தங்களைக் காட்சிப்படுத்தினர்.
மேலும் மாணவர்கள் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி என்பதன் சுருக்கமான ஏ.எம்.ஜெ. சின்னமாகவும் ஒருங்கிணைந்தனர்.
இந்த நிகழ்வில் முக்காலத்திற்கும் பொருந்திய மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடிய பொருண்மையில் அமைந்த எட்டுக் கவிதைகளை மாணவர்கள் கூட்டாக அரங்கேற்றினர்.
“தொலைநோக்குப் பார்வையாளருக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் அமைந்த எட்டாவது கவிதை, கல்லூரியின் நிறுவனருக்காக ஆங்கிலத் துறைப் பேராசிரியர்களால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இக்கவிதை, “கல்லூரி தொடங்கப்பட்ட நாளிலிருந்து தன்னுடைய உயர்பண்புகளாலும், இலக்காலும் கல்லூரியை வழிப்படுத்திய நிறுவனரின் உயர் குணத்தை வியந்தும் கல்லூரியின் மீதான மரியாதையை புலப்படுத்தும் படைப்பாகவும் அமைந்திருந்தது.
இந்நிகழ்வு பற்றிப் பேசிய அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் இணைச்செயலர் ஹேமந்த் சோர்டியா கூறுகையில்:-‘ இந்த உலக சாதனை முயற்சி நிறுவனர் நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதி என்பதற்கும் மேலாக, ஒட்டுமொத்தக் கல்லூரியின் உணர்வையும் சிறந்த அர்ப்பணிப்பு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இக் கவிதைகள் ஒவ்வொன்றும் அவற்றில் பொதிந்துள் உந்துதல் பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை. மேலும் நமது நிறுவனக் கொள்கைகளின் வெளிப்பாடாகவும் இக்கவிதைகள் விளங்குகின்றன .எங்கள் மாணவர்கள் கல்லூரியின் மரபினை மதிக்கும் வகையில் ஒன்றுகூடியிருப்பது கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்..