மதுரை மாநகராட்சி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.28 கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 860 மாணவிகள் பயின்று வருகிறார்கள். மாணவிகளின் வசதிக்காக SIG INFRASTRUCTURE 2023 – 2024 திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மேயர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இக்கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 184 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து மண்டலம் 4 வார்டு எண்.30 மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். வார்டு எண்.30 ஜெகஜீவன்ராம் தெருவில் உள்ள பொது கழிப்பறை பயன்பாட்டிற்காக புதிய ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை மேயர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மதுரை ஆயுதபடை மைதானத்தில் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டு போட்டிகளை மேயர் கொடியசைத்து துவக்கி வைத்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களை மேயர் வழங்கினார். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் சத்துணவு கூடம் மற்றும் பள்ளி வளாகத்தை
சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு மேயர் கூறினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் ரகுபதி,
செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ்,
மயிலேறிநாதன். உதவிப் பொறியாளர்கள் பொன்மணி, சந்தனம், சுகாதார அலுவலர் கோபால், மாமன்ற உறுப்பினர்கள் உமா, வசந்தாதேவி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.