அரியலூர், ஜூலை:26
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சியில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.
தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி வாலாஜாநகரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, திறந்தவெளி மலம் கழித்;தல் இல்லாத ஊராட்சி, ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவாதிக்கப்பட்டது.
இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்புகள் 100 சதவீதம் வழங்கிய ஊராட்சி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகள் என்ற பொருட்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் சுகாதாரமான கழிவறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இவற்றை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தனிநபர் இல்ல கழிப்பறைகள், சமுதாய கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி, அதனை முறையாக பராமரிக்கவும் செய்ய வேண்டும்.
வாலாஜாநகரம் ஊராட்சியானது நகர்ப்புறத்திற்கு அருகிலுள்ள ஊராட்சி என்பதால், அதிகமான மக்கள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் குப்பைகளை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் குப்பைகள் சேகரித்து அதற்கான வாகனங்கள் வரும்போது அகற்றி கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, சுகாதாரமான முறையில் உள்ள கழிவறை பயன்படுத்தி ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் தனி மனித சுகாதாரம் ஏற்படுத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்