நாகர்கோவில் ஜூலை 3
குமரி மாவட்டத்தில் கடற்கரையோரம் உள்ள 48 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை ஈட்டி தரும் மீன் வர்த்தகம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, வாழை, ரப்பர் போன்ற விவசாயம் நடைபெறுவதைப் போல மீனவ கிராம மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மொத்தம் 4 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன.
மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் தொழிலில் ஈடுபட்டு மீன் பிடித்து இத் துறைமுகங்களுக்கு தான் கொண்டு வருவார்கள். அவ்வாறு துறைமுகங்களுக்கு வரும் மீனவர்களிடம் இருந்து பெரிய வியாபாரிகள் சிலர் மீன்கள் விலைக்கு வாங்கி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ‘பார்மலின்’ ரசாயனத்தை கலந்து விற்பது தற்போது தெரிய வந்துள்ளது.இறந்த உடலை நீண்ட நாட்கள் கெடாமல் வைக்கப் பயன்படும் இந்த ‘பார்மலின்’ ரசாயனம் கலந்த உணவை மனிதர்கள் தொடர்ந்து உட்கொண்டால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்படும். நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் ஆகிய பகுதிகளில் பார்மலின் கலந்த மீன்களை வாங்கி உண்ட மக்கள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்டனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கூறி பல வாரங்கள் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்த பார்மலின் கலந்த மீன்களை உண்ணும் போது ப்ளீச்சிங் பவுடர் வாடை வீசுவதை வைத்து தான் கண்டு பிடிக்க முடியும் என்றும், எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.