நாகர்கோவில் ஜூன் 20
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் தென்மேற்கு பருவ மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் முக்கிய சுற்றுலா மையமான காளிகேசம் குற்றியாறு இரட்டை அருவிக்கு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது அதனை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மழையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறியதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா மையமான காளிகேசம், குற்றியாறு இரட்டை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்திருந்தனர். தற்போது தென்மேற்கு பருவ மழை மிதமான பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் நேற்று முதல் காளிகேசம் குற்றியாறு இரட்டை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் இந்த வாரம் விடுமுறையில் இருந்து இப்பகுதிகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.