தஞ்சாவூர், செப். 30
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி தெரிவித்தார். இதையொட்டி மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால முன்னேற்பாடு பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நீர் இறைக்கும் மோட்டார்கள், மின்சார கருவிகள், மரக்கிளைகளை அகற்றும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களை மேயர் பார்வையிட்டார். மேலும், கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை இயக்கி அவற்றின் செயல்பாடுகளையும் சோதனை செய்தார்.
மழைக்காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து, தண்ணீரை விரைவாக அகற்றுவதற்கான தேவையான கருவிகள் மற்றும் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஷ்வரி, மண்டலக் குழுத் தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.



