குழந்தைகளுக்கு கலெக்டர் மு.பிரதாப் தங்க மோதிரம் அணிவித்தார்
நாகர்கோவில், செப். 28: ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்றார்.
தயாரிக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி அடுத்த 12 முதல் 13 நாட்களுக்குள் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு தாய்மார்கள் வரவழைக்கப்பட்டு மோதிரங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
நேற்று ஒரே நாளில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கும், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 15 குழந்தைகளுக்கும், குழித்துறை அரசு மருத்துவமனையில் 15 குழந்தைகளுக்கும் என மொத்தம் 60 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் லியோ டேவிட் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
Meta Description:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 60 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.



