கன்னியாகுமரி, செப்.04.
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சசி என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் குழித்துறை பகுதியை சேர்ந்த ஜெகதி, மேல்புறம் ஜாண், தக்கலை சந்திரன், புதுக்கடை வினு, மடிச்சல் கைலாஷ் மற்றும் மேக்கோடு சிஜின் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம், 6 செல்போன்கள் மற்றும் 3 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த கும்பல் சில காலமாக இடங்களை மாற்றி மாற்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ஜெகதி முக்கிய நபராக செயல்பட்டதாகவும், கைதான சிலர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



