கன்னியாகுமரி, ஆக.22:
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். கேன்டீன் அருகே மீன் வலைகள் பின்னும் பகுதியில் கிடந்த அவரது அருகில் மது பாட்டில்கள் மற்றும் செருப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கன்னியாகுமரி டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இறந்தவர் யார் என்பது இதுவரை தெரியாத நிலையில், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் விசைப்படகு உரிமையாளர்கள், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் இறந்தவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



